பயிற்சி பெண் டாக்டருக்கு தொல்லை தஞ்சையில் பேராசிரியரிடம் விசாரணை
பயிற்சி பெண் டாக்டருக்கு தொல்லை தஞ்சையில் பேராசிரியரிடம் விசாரணை
ADDED : மே 11, 2024 08:05 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மயக்கவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பெண் பயிற்சி டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக, மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதனிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர், சமூக வலைதளங் களில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டனர். மேலும், பல்வேறு துறை சார்ந்த டாக்டர்களும் பாலியல் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, நேரடியாக கல்லுாரி முதல்வரிடம் பேசி, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், விசாகா கமிட்டியால், மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மாணவ - மாணவியர், பேராசிரியர் உள்ளிட்டோரிடம் 8 மணி நேரம் விசாரணை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் விசாகா கமிட்டி விசாரணையில், பாலியல் தொல்லை தந்த பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:
மருத்துவக் கல்லுாரி களில் பாலியல் தொல்லை அதிகளவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் வெளியில் சொல்வர். சிலர் படிப்பு செய்முறைத் தேர்வில் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் சொல்லாமல் கடந்து விடுவர்.
இதை பல பேராசிரியர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வர். இதுகுறித்து கல்லுாரி முதல்வரிடம் முறையிட்டாலும் பயன் இருப்பது இல்லை. விசாகா கமிட்டி எல்லாம் பெயரளவுக்கு தான் உள்ளது.
மயக்கவியல் துறை பேராசிரியர் குறித்து புகார் அளித்தும் அவரை காப்பாற்ற பலரும் முயன்று வருகின்றனர். இதனால்தான் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டோம். இதற்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.