ஆக., 27ல் ஊதிய ஒப்பந்த பேச்சு போக்குவரத்து துறை அறிவிப்பு
ஆக., 27ல் ஊதிய ஒப்பந்த பேச்சு போக்குவரத்து துறை அறிவிப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:06 AM
சென்னை:அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு, ஆக., 27ல் நடைபெறும் என தமிழக போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் 15வது ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.
தொழிற்சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில், நேற்று 8ம் கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னையில் நடந்தது.
இதில், போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பேச்சு நடந்தது.
இந்த கூட்டத்தில், ஆக., 27ல் ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.ஐ.டி.யு., பொதுச்செயலர் ஆறுமுக நயினார் கூறுகையில், ''ஊதிய ஒப்பந்த பேச்சு, ஆக., 27ல் நடைபெறும்; அதில் அனைத்து விஷயங்களையும் பேசிக் கொள்ளலாம்.
''ஓய்வூதியர் பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக, அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என அதிகாரிகள் கூறினர். காலி பணியிடங்களை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வலியுறுத்தினோம்,'' என்றார்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலகண்ணன் கூறுகையில், ''அரசு அறிவித்துள்ளபடி, ஆக., 27ல் பேச்சு நடத்தி, ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது கூடாது என வலியுறுத்தினோம்,'' என்றார்.

