ADDED : மே 20, 2024 12:47 AM
ராமநாதபுரம்: - தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில், 25 ஆயிரம் காலிப்பணியிடங்களைநிரப்பக்கோரி டெப்போக்கள் முன் ஜூன் 24 ல் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த கூட்டத்தில், தொழிலாளர்களின் பணிக்காலத்தில் சேமிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி ரூ.15 ஆயிரம் கோடி போக்குவரத்துக்கழகங்கள் செலவிட்டுள்ளன. இதன் காரணமாக பணி ஓய்வு பெறுபவர்கள் வெறும் கையுடன் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. 18 மாதங்களாக ஓய்வு பெற்ற 6000 தொழிலளார்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 90 ஆயிரம் பேருக்கு 102 மாதங்களாக அகவிலைப்படி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கு வழங்குவது போல் மருத்துவ காப்பீடும் வழங்கப்படுவதில்லை. உடனடியாக அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். 2003 ஏப்.1க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என்பதை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக்கழகங்களில் டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பிரிவுகளில் காலியாகவுள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் செய்ய வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஜூன் 10 முதல் 15 வரை வாயில் கூட்டங்கள் நடத்தவும், அனைத்து டெப்போக்களின் முன்பும் ஜூன் 24 காலையில் தொடங்கி 25 காலை வரை 24 மணி நேர உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

