செந்தில் பாலாஜி மீதான வழக்கு சாட்சிகள் விசாரணை துவக்கம்
செந்தில் பாலாஜி மீதான வழக்கு சாட்சிகள் விசாரணை துவக்கம்
ADDED : ஆக 16, 2024 08:03 PM
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, அமலாக்கத் துறை பதிவு செய்த சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், சாட்சிகள் விசாரணை துவங்கியது.
இவ்வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதில் இருந்து விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும், நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 8ல் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சாட்சிகளுக்கு 'சம்மன்' அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதல் சாட்சியாக சேர்க்கப்பட்ட கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் அப்போதைய மேலாளர் ஹரிஷ்குமார் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் விசாரணை நடத்தினார். செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா, சகோதரர் அசோக்குமாரின் வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை, ஹரிஷ்குமார் கூறினார்.
அவற்றில் ஒருசிலவற்றுக்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மா.கவுதமன் ஆட்சேபம் தெரிவித்தார். பின், அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக, வழக்கு விசாரணையை, வரும் 22க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும், 55வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார்.

