குல தெய்வ வழிபாடு தகவல்: கவர்னர் அலுவலகம் விளக்கம்
குல தெய்வ வழிபாடு தகவல்: கவர்னர் அலுவலகம் விளக்கம்
ADDED : ஜூன் 25, 2024 04:18 AM

சென்னை: 'குல தெய்வ வழிபாடு குறித்து, கவர்னர் கூறியதாக பரவும் உண்மைக்கு மாறான தகவலை நம்ப வேண்டாம்' என, கவர்னர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக கவர்னர் அலுவலகமான ராஜ் பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய சாவுகளுக்கு காரணமான, குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என, கவர்னர் ரவி கூறியுள்ளதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
கவர்னரின் புகழுக்கும், கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுத்தும் வகையிலும், இந்த உண்மைக்கு புறம்பான செய்தி, உள் நோக்கத்துடன் பரப்பப்படுகிறது.
மேற்கண்ட தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்த பொய் தகவலை பரப்புவோர் குறித்து, விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.