சீமான் மீது வழக்கு தொடர்வேன் மனைவியுடன் எக்ஸ் தளத்தில் இருந்தும் வெளியேறினார் திருச்சி எஸ்.பி., அறிவிப்பு
சீமான் மீது வழக்கு தொடர்வேன் மனைவியுடன் எக்ஸ் தளத்தில் இருந்தும் வெளியேறினார் திருச்சி எஸ்.பி., அறிவிப்பு
ADDED : ஆக 24, 2024 10:51 PM

திருச்சி:ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார் திருச்சி எஸ்.பி.,யாகவும், அவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை எஸ்.பி., யாகவும் உள்ளனர்.
வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துக்களை பரப்பி வருவதால், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதன் பிறகும், 'எக்ஸ்' தளத்தில் தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை பதிவிட்டு வருவதால், 'சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்' என்று பதிவிட்டு, வருண்குமார் 'எக்ஸ்' தளத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
கொலை மிரட்டல்
அவரது மனைவி வந்திதா பாண்டேவும் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினார்.
வருண்குமார் வெளியிட்ட அறிக்கை:
என்னை பற்றி அவதுாறு பரப்பிய, 'யு, டியூபர்' சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்திற்காக, என்னை தாண்டி என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் என என்னை சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதுாறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன், எக்ஸ் தளத்தில் பரப்பினர்.
என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது.
இது, ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது.
தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும், 51 'எக்ஸ்' தள கணக்குகளை ஆராய்ந்த போது, இவை அந்த கட்சி ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி, மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் துாண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இவை அனைத்தும் போலி கணக்குகளாகவும், தொடர்ந்து, இதே வேலையை செய்து வருபவையாகவும் உள்ளன.
பல போலி கணக்குகள் வாயிலாக, அந்த கட்சியின் துாண்டுதலால், வெளி நாடுகளில் வாழும் தமிழ் தெரிந்தவர்களுக்கு பணம் கொடுத்து, ஆபாச பதிவுகளை பதிவிட்டதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக, நான் அளித்த மூன்று புகார்களின்படி, மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆபாச தாக்குதல்
நானும், என் மனைவி வந்திதா பாண்டே ஆகியோர் தமிழகத்தில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் எஸ்.பி.,க்களாக பணிபுரிகிறோம்.
இந்த சவாலான பணியில், நேர்மையாக கடமையாற்றினால், மக்களின் நன்மதிப்புகளோடு ஒரு சிலரின் பகையையும் சம்பாதிக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம்.
பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல.
நிஜ வாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில், இந்த இணைய கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல.
என்ன தான் போலீஸ் துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும், நாங்களும் சராசரி மனிதர்கள் தான்.
குழந்தைகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக, இந்த 'எக்ஸ்' இணைய உரையாடல்களில் இருந்து, நானும், என் மனைவியும் தற்காலிகமாக விலக முடிவு செய்துள்ளோம். எங்கள் இந்த முடிவு தற்காலிகமானது.
நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு, இதுபோன்ற குறுக்கீடுகளை புறந்தள்ளுகிறோம். முகம் தெரியாத கோழைகளுக்கும், இணையக் கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை.
அதே நேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக, இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலை கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். இந்த கூட்டத்திற்கு, சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டி உள்ளது.
இது சம்பந்தமாக, சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவது உறுதி.
ஆபாசம் பரப்பும் விஷமிகளையும், அவர்களை கூலிக்காக துாண்டி விடும் கட்சி பொறுப்பாளர்களையும் சட்டப்படி வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் நிறுத்துவதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன்.
இது தவிர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.