உண்மையை மறைக்க முயற்சியா? சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்
உண்மையை மறைக்க முயற்சியா? சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்
ADDED : ஜூலை 15, 2024 12:56 AM
சென்னை: 'ரவுடி திருவேங்கடத்தை போலீசார் சுட்டுக் கொன்றதன் வாயிலாக, ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது' என, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடத்தை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தப்பி ஓடும் போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாக சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது, பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த கொலையில், தி.மு.க.,வினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சி நடப்பது போல தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: யாரை காப்பாற்ற இந்த என்கவுன்டர் என்ற கேள்வி எழுகிறது.
சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும், அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கை, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
திருவேங்கடத்தின் வாக்குமூலத்தை, முழுவதுமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி: திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கியமான கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை, அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
முக்கிய அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில், போலீசார் அலட்சியமாக இருந்தது எப்படி? உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க, தி.மு.க., அரசு நடத்திய நாடகமா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுகுறித்து, மனித உரிமைகள் ஆணையமும், நீதிமன்றமும் விசாரித்து, உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

