ADDED : மே 24, 2024 10:06 AM
கோவை; கோவை சரவணம்பட்டி துடியலுார் சாலையில், சின்னவேடம்பட்டி அருகே ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 'ராமன் விகார்' எனும் குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்பு வளாகத்தில் பூங்காவும் உள்ளது. இப்பூங்காவில், நேற்று மாலை, அங்கு குடியிருக்கும், பிரசாந்த் ரெட்டியின் மகன் ஜீயானஸ், 6, மற்றும் பாலசுந்தர் எனபவரின் மகள் வியோமா பிரியா, 8 ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவில் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
குழந்தைகளை மீட்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில், இக்குடியிருப்பு கட்டி விற்பனை செய்யப்பட்ட பின், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும், குழந்தைகள் விளையாடிய சறுக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.