பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பா.ம.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பா.ம.க., கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது
ADDED : பிப் 26, 2025 05:48 AM

வானுார்: வளர்ச்சி திட்டப்பணி மேற்கொள்ள வார்டுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து வானுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் மண் சட்டியுடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய பா.ம.க., பெண் கவுன்சிலர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் ஒன்றிய கூட்டம் நேற்று சேர்மன் உஷா முரளி தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், 23வது வார்டு பா.ம.க., பெண் கவுன்சிலர் மகாலட்சுமி, அவரது கணவரான மத்திய ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் ஆகியோர், தனது வார்டில் அடிப்படை பிரச்னைகள் குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றம் சாட்டினார். அப்போது, வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய சேர்மன் மற்றும் பி.டி.ஓ.,க்களை கண்டித்து மண் சட்டியுடன் வைத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அங்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீ சார் இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
தகவலறிந்த பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் ரகுராமன், ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் நிர்வாகிகள் திரண்டு போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இருவரையும் விடுவித்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

