ADDED : செப் 08, 2024 02:26 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் பகுதியில், தனியார் பெட்ரோல் பங்க்கில் நேற்று காலை பாலசுப்பிரமணியம், 50, பெட்ரோல் போட வந்துள்ளார். அவர் வரிசையில் நிற்காமல் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஜெயராணி, அவரை வரிசையில் வருமாறு கூறியுள்ளார். இதில், பாலசுப்ரமணியன், ஜெயராணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜெயராணி தன் கணவர் அலெக்சுக்கு போனில் பேசி, தன்னிடம் ஒருவர் தகராறு செய்வதாகக் கூறியுள்ளார். உடனே, பாலசுப்பிரமணியம் தன்மகன் சட்ட கல்லுாரி மாணவரான ஹரிஹரன், 24,என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இருதரப்பும் பேசிக் கொண்டிருந்த போது, ஹரிஹரன் பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார்.
ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளாள் ஹரிஹரன், அவரது அத்தை மகன் கார்த்திக், 25, ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார். ஹரிஹரன், கார்த்திக் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிழக்கு போலீசார் அலெக்சை கைது செய்தனர்.