சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மணமக்களுக்கு உதயநிதி 'அட்வைஸ்'
சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் மணமக்களுக்கு உதயநிதி 'அட்வைஸ்'
ADDED : மார் 13, 2025 12:13 AM

சென்னை:''திருமணம் ஆனவர்களுக்கு ஒரே வேண்டுகோள்; விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற்றுக் கொள்ளாதீர்கள்,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொருளாதார நிலையில் பின்தங்கிய 73 ஜோடிகளுக்கு, இலவசதிருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து, இந்த திருமணங்களை துணை முதல்வர் உதயநிதி நடத்தி வைத்தார். நான்கு கிராம் தங்கத் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட 50 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
பின், உதயநிதி பேசியதாவது:
முதல்வரின் பிறந்த நாளையொட்டி, 72 நிகழ்ச்சிகளை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நடத்தி வருகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளில், 1,700 இலவச திருமணங்களையும் அமைச்சர் நடத்தியுள்ளார்.
அரசு தரப்பில் திருமண திட்டங்கள் என, தனி துறை துவங்கப்பட்டால், அதற்கும் இவர் தான் அமைச்சர்.
சீர்திருத்த முறையில், இன்று சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்துள்ளோம். இதில், பலர் கலப்பு மற்றும் காதல் திருமணங்கள் செய்துள்ளனர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
தற்போதுள்ள சூழலில் கலப்பு திருமணம் நடப்பது அரிது. காதல் திருமணங்கள் எளிதில் நடப்பதில்லை. ஆண் வீட்டில் ஏற்றால், பெண் வீட்டில் ஏற்பதில்லை. இரு வீட்டாரும் ஏற்றாலும், உறவினர்கள் ஏற்பதில்லை.
முன்பெல்லாம் திருமணம் என்பது ஜாதி, மத பாகுபாடு பார்த்தே நடந்தது. தற்போது, இது போன்ற பாகுபாடுகள் இன்றி, முற்போக்கு திருமணங்கள் நடக்க, திராவிட அரசின் உழைப்பே காரணம்.
இங்கு திருமணம் ஆனவர்களுக்கு ஒரு வேண்டுகோள்; விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அதிகம் பெற்றுக் கொள்ளாதீர்கள்.
அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையை குறைக்க வலியுறுத்தி, மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை அறிவித்தது. இதை வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளோம். இதற்காக, நாம் வஞ்சிக்கப்பட உள்ளோம்.
மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், எட்டு குறைக்கப்படும்.
தொகுதி குறைய குறைய நமக்கான உரிமைகள் பறிக்கப்படும். எனவே, குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.