சவுக்கு சங்கர் வழக்கில் எதிர்பாராத திருப்பம் கோவையில் இருந்து புழலுக்கு மாற்ற உத்தரவு
சவுக்கு சங்கர் வழக்கில் எதிர்பாராத திருப்பம் கோவையில் இருந்து புழலுக்கு மாற்ற உத்தரவு
ADDED : மே 25, 2024 02:03 AM
சென்னை:பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக அளித்த புகாரில், 'யு டியுபர்' சங்கர் கைது செய்யப்பட்டார். பின், அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து சில புகார்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார்.
தனித்தனியே மனு
அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், கோவை சிறையில் சங்கர் தாக்கப்பட்டது குறித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியும், சங்கரின் தாய் கமலா ஐகோர்ட்டில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்தார்.
இம்மனுக்கள் நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஜான் சத்யன், ஸ்ரீசரண்; அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடினர். வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி புகார்தாரர்கள் சந்தியா, வீரலட்சுமி ஆகியோர் தரப்பில் செல்வி ஜார்ஜ், எஸ்.பிரபாகரன் ஆஜராயினர்.
நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுநாள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக நீதிபதி சுவாமிநாதன் அறிவித்தார்.
அரசு தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல், இவ்வளவு வேகமாக வழக்கை விசாரிக்க என்ன அவசியம் வந்தது என அட்வகேட் ஜெனரல் கேட்டார்.
நீதிபதி சுவாமிநாதன் எதுவும் சொல்லாமல் மறுநாளைக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார். நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், முந்தைய நாள் அரசு தரப்பில் கேட்கப்பட்ட கேள்வியை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும்; அதில் ஒரு ஆச்சரியம் இருக்கும் என புதிர் போட்டார். இதனால் அனைவருக்கும் ஆவல் அதிகரித்தது.
பிற்பகலில் கோர்ட் கூடியதும், புதிரை விடுவித்தார் நீதிபதி.
“மேல் மட்டத்தில் உள்ள இரண்டு பேர் என்னை சந்தித்து, இந்த வழக்கை நான் எடுக்கக்கூடாது என்று எனக்கு அட்வைஸ் செய்தார்கள். நான் மதுரை கிளையில் பணியாற்றுபவன்.
''கோடை விடுமுறைக்கால நீதிபதியாக சென்னைக்கு மாற்றப்பட்டிருக்கிறேன். ஒரு வாரம் தான் இங்கு இருப்பேன். ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடந்தபின் இந்த வழக்கை நான் விசாரிக்காமல் இருந்தால் அரசியல் சாசன கடமையில் இருந்து தவறியவன் ஆகிவிடுவேன். அவர்களின் திட்டத்தை முறியடித்தாக வேண்டும்.
''ஆகவேதான் அட்வகேட் ஜெனரலும் மற்றவர்களும் இந்த வழக்கை விசாரித்து முடிக்க அப்படி என்ன அவசரம் என கேட்ட பிறகும் நான் கையில் எடுத்திருக்கிறேன்” என்றார்.
ரத்து செய்கிறேன்
குண்டர் சட்டத்தின் கீழ் சங்கரை கைது செய்ய கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி சுவாமிநாதன் அறிவித்தார்.
''பல வழக்குகளில் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எந்த வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைக்காது என்பதால், உடனடியாக வெளியில் வர வாய்ப்பே இல்லை. எனவே, அவரால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
''இந்த அம்சங்களை எல்லாம் முறையாக பரிசீலிக்காமல் குண்டர் சட்டத்தின் கீழ் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்” என்று நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் கைதாகும் நபரை ஜாமீனில் விடுவித்தால், அவரால் பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும் என்ற நிலை இருந்தால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கலாம் என்று விதிகள் கூறுகின்றன.
சிறை மாற்றம்
நீதிபதி சுவாமிநாதன் தன் உத்தரவை வாசித்த பின், வழக்கில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது.
அந்த உத்தரவை பிறப்பிக்க நீதிபதி சுவாமிநாதன் விவரித்த பின்னணியை அமர்வின் இன்னொரு நீதிபதி பாலாஜி முழுதுமாக கேட்டுக் கொண்டிருந்தார். ''இருந்தாலும் அந்த (ரத்து) உத்தரவை நான் ஏற்கவில்லை. அரசு தரப்பு பதிலை பெற்ற பின், இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றே நம்புகிறேன்” என, நீதிபதி பாலாஜி தன் உத்தரவில் தெரிவித்தார்.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், அமர்வில் மூன்றாவது நீதிபதி சேர்க்கப்படுவார்.
அவர் யார் என்பதை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் முடிவு செய்வார்.
கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் வேறு சிறைக்கு மாற்றுமாறு சங்கர் கோரியிருந்தார். அவரது தாயின் மனுவிலும் அக்கோரிக்கை இடம் பெற்றது. அந்த கோரிக்கையை இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர்.
கோவையில் இருந்து, சென்னை புழல் சிறைக்கு சங்கரை மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவை சிறையில் தாக்கப்பட்டதாக அளித்த புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.

