நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் பதவி உயர்வை எதிர்நோக்கும் நீர்வளத்துறையினர்
நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் பதவி உயர்வை எதிர்நோக்கும் நீர்வளத்துறையினர்
ADDED : ஜூலை 31, 2024 09:01 PM
மதுரை:நீர்வளத்துறையின் உதவி பொறியாளர் நிலையில் இருந்து முதன்மை பொறியாளர் வரையிலான அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி தலைமை பொறியாளர், சென்னை பயிலரங்கு மற்றும் பராமரிப்புத்துறை தலைமை பொறியாளர் பணியிடங்கள், இரண்டு மாதங்களாக நிரப்பப்படவில்லை. மதுரை மண்டல தலைமை பொறியாளர், நேற்று பணி ஓய்வு பெற்றதால் அதுவும் காலியாகி விட்டது.
செயற்பொறியாளர் நிலையில் இருந்து பலர் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்றதால், அங்கும் 25க்கும் மேற்பட்ட செயற்பொறியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன. உதவி செயற்பொறியாளர் பதவியில் 60 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தின் நீர்வளத்துறையில் மட்டும் நான்கு தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தாலும் துறை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை. இதனால் நிர்வாகப்பணிகளிலும் பணிகள் திட்டமிடல், செயல்படுத்துதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலரின் பதவி உயர்வை கருத்தில் கொண்டே தலைமை காலிப்பணியிடங்கள் திட்டமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனியாரிட்டி அடிப்படையில் தாமதமின்றி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.