மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்
ADDED : ஏப் 10, 2024 06:46 AM

மதுரை : மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டலில் தங்கினார். வேட்பாளர் ராமஸ்ரீநிவாசன் அமைச்சரை சந்தித்தார்.
நேற்று காலை 9:10 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் முக்குறுணி விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தின் முன் நின்று போட்டோ எடுத்து கொண்டார். காலை 9:40 மணிக்கு கோயிலில் இருந்து கிளம்பினார். தனிவிமானத்தில் அஸாம் சென்றார்.
தடை விதிப்பு
முன்னதாக அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்டசக்தி மண்டபம் வழியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. அமைச்சர் தங்கிய ஓட்டலில் இருந்து கோயில் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோயிலை சுற்றிய பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.
பா.ஜ., நகர தலைவர் மகாசுசீந்திரன், பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் சுப்ரமணியன், பாலா, கிருஷ்ணன், கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், பார்வையாளர் கார்த்திக் பிரபு கோயிலுக்கு அவருடன் சென்றனர்.

