இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்; மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் 'ரோடு ஷோ'வில் பேச்சு
இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்; மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் 'ரோடு ஷோ'வில் பேச்சு
ADDED : ஏப் 09, 2024 05:29 AM

ராஜபாளையம் : மீண்டும் 2024ல் பா.ஜ., ஆட்சி அமைக்கும் போது இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு முன்னேறும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ரோடு ஷோவில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
ராஜபாளையத்தில் தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து ஏப்., 5ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருந்த நிகழ்ச்சி ரத்தானது.
இந்நிலையில் ராஜபாளையத்தில் நேற்று ஜான்பாண்டியனை ஆதரித்து ராஜ்நாத்சிங்கின் ரோடு ஷோ நேற்று நடந்தது. இதற்காக நேற்று மாலை 5:10 மணிக்கு ராஜபாளையம் பி.ஏ.சி.எம்.பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். மாலை 5:18 மணிக்கு சொக்கர் கோயிலில் இருந்து ரோடு ஷோ துவங்கி பழைய பஸ் ஸ்டாண்ட் வரை 2 கி.மீ., துாரத்திற்கு திறந்தவெளி வாகனத்தில் ஓட்டு சேகரித்த படி சென்றார்.
வழிநெடுக பா.ஜ.,வினர், த.ம.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணியினர் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாநில போலீசாரிடம் இருந்து பாதுகாப்பு பணிகளை பெற்று மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்தனர்.
500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
ரோடு ஷோ நிறைவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பா.ஜ.,விற்கும், இண்டியா கூட்டணிக்கும் இருக்கும் வேற்றுமை என்னவென்றால் நாம் பாரத தேசத்திற்காக பணி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இண்டியா கூட்டணியினர் அவர்களின் குடும்ப அரசியலை மட்டும் கணக்கில் கொண்டு ஆட்சி செய்ய துடிக்கின்றனர்.
அன்று இந்தியா சொல்வதை உலக நாடுகள் கேட்காது. இன்று நிலைமையே வேறு. இன்று பாரதம் என்ன சொல்கிறதோ அதை உலக நாடுகள் கேட்கின்றன. இந்தியா என்ன சொல்லப் போகிறது என்பதை பற்றி உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன.
இதுதான் பிரதமர் மோடி அரசுக்கும், காங்., அரசுக்குமான வித்தியாசம். மோடி ஆட்சிக்கு முன் நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று 5வது இடத்திற்கு வந்துள்ளது.
மீண்டும் 2024ல் பா.ஜ, ஆட்சி அமைக்கும் போது உலக அளவில் 3வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.பிரதமர் மோடி வரும் முன் பாரத தேசத்தில் அந்நிய சக்திகள் பல தாக்குதல் நடத்தின. இன்று தாக்குதல் நடத்த யோசிக்கின்றனர்.
பாதுகாப்பான தேசத்திற்கு மூன்றாவது முறையும் பா.ஜ., ஆட்சி வர வேண்டும். 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகவும், உலகின் சூப்பர் பவராகவும் மாற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் சங்கல்பத்திற்கு ஒவ்வொரு பா.ஜ., வேட்பாளரின் வெற்றியும் அவசியமாகிறது. என்றார்.
தென்காசி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் மகாராஜன், இணை பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர்கள் ராஜேஷ் ராஜா, சரவண துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

