UPDATED : ஜூன் 02, 2024 05:13 AM
ADDED : ஜூன் 01, 2024 11:22 PM

தமிழகத்தில் சமீப காலமாக தாராளமாக கிடைக்கும் போதை மாத்திரை, போதை ஊசி, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகளை சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் பயன்படுத்தி சீரழிந்து வருகின்றனர். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகரம், மாவட்ட போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படையினர் 'ரெய்டு'
தொழிலாளர் நகரமாக உள்ள திருப்பூரில் கஞ்சா பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இதற்காக பிரத்யேக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டேஷன் வாரியாக தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள், சிறையில் இருந்து வெளியே வருபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என, ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு கண்காணிக்கின்றனர். தொடர்ந்து, குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்வதோடு, கடைகளுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 மாதங்களில், 117 வழக்கு
மாநகரை பொறுத்தவரை கஞ்சா விற்பனையில் போலீசார் அன்றாடம் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு கடந்த ஜன., முதல் மே மாதம் வரை என, ஐந்து மாதங்களில், 117 வழக்குகள் பதியப்பட்டு, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம், 18 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 188 கிலோ கஞ்சா; ஒரு லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் பணம்; 13 டூவீலர்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மட்டும் 38 வழக்கு பதியப்பட்டு, 63 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 9 லட்சத்து, 14 ஆயிரம் மதிப்புள்ள, 91 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 ஆயிரம் ரூபாய் பணம், ஆறு டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கையில் பெரும்பாலும், 15 வயது முதல், 25 வயது வரை உள்ள நபர்கள் அதிகமாக இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களில், கஞ்சா, குட்கா போன்றவற்றை மொத்த விற்பனை செய்யும், 11 பேரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
ரயில் மூலம் கடத்தல்
போலீசார் சோதனையை மீறியும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் எளிதாக கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகின்றனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, சோதனை செய்யப்படும் முந்தைய ரயில்வே ஸ்டேஷன்களில் இறங்கி, அங்கிருந்து வாகனங்களில் மாநகருக்குள் கொண்டு வருகின்றனர். கூரியர், ஆம்னி பஸ்களில் கடத்தி வந்து புழக்கத்தில் விடுகின்றனர்.
குட்கா கடைகளுக்கு 'சீல்'
மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா விஷயங்களில் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். குட்கா விற்பனை கடைகளில், பறிமுதல் செய்வதோடு கடைகளுக்கு 'சீல்' வைத்து வருகின்றனர். சமீபத்தில், பெருமாநல்லுார் அருகே, மூன்று கார்களில் கடத்தப்பட்ட, ஆயிரத்து, 650 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கடைகளுக்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
கஞ்சா, குட்காவை கண்டறியும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும். முற்றிலும் இதற்கான வழிகள் அடைக்கப்பட வேண்டும்.
பள்ளி மாணவன் கஞ்சா சப்ளை
போதைப்பொருள் தொடர்பாக பள்ளி, கல்லுாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சிலர் ஆபத்து தெரியாமல் சிக்கிக்கொள்கின்றனர். சில மாதங்கள் முன், ஒரு பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் திடீரென ஏற்பட்ட பணப்புழக்கம் குறித்து சந்தேகமடைந்து விசாரித்தனர். கஞ்சாவை கை மாற்றி விடுவதன் மூலம் கிடைத்த பணம் என்பது தெரிந்தது. 20 ஆயிரம் ரூபாயை மாணவன் வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியாயினர். மாணவனுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அதில், அந்த மாணவன் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொட்டலங்கள் கைமாற்றி கொடுத்தது தெரிந்தது.
இன்னொரு பள்ளியில் பிளஸ்2 படிக்கும், ஆறு மாணவர்கள் பள்ளி நேரத்தில் கஞ்சா போதையில் இருப்பதை கண்டறிந்தனர். இதையொட்டி, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் குழுவினர் சோதனையும் நடத்தினர்.
பள்ளி திறக்க உள்ள நிலையில், காலை, மாலை போன்ற நேரங்களில் அந்தந்த பள்ளிகளுக்கு வெளியே போலீசார் நின்று கண்காணிப்பதோடு, சந்தேகப்படும் விதமான நடவடிக்கையில் உள்ள மாணவர்களை விசாரிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தனிப்படை தீவிர கண்காணிப்பு
மாநகரில் தொடர் கண்காணிப்பு நடக்கிறது. யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது, எங்கிருந்து வருகிறது போன்ற விபரங்களை பெற்று கைது நடவடிக்கை உள்ளது. பிரதானமாக விற்பனை செய்து வரும், மொத்த விற்பனையாளராக உள்ள, 11 பேரை கண்டறிந்து கைது செய்தோம். ஆந்திரா எல்லை, ஒடிசா போன்ற இடங்களில் கஞ்சா, குட்காவை கொண்டு வருகின்றனர். ரயில், தனியார் வாகனங்களில் கொண்டு வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தனிப்படை மூலம் கண்காணித்து வருகிறோம்.
- பிரவீன்குமார் அபிநபு,
போலீஸ் கமிஷனர், திருப்பூர்.