நா.த.க.,வில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல் கட்சியை பலப்படுத்த சீமான் சுற்றுப்பயணம்
நா.த.க.,வில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல் கட்சியை பலப்படுத்த சீமான் சுற்றுப்பயணம்
ADDED : பிப் 25, 2025 06:47 PM
சென்னை:நாம் தமிழர் கட்சியில் இருந்து, மாநில, மாவட்ட நிர்வாகிகள், அடுத்தடுத்து விலகி வருகின்றனர். மற்ற நிர்வாகிகளை தக்க வைக்கவும், கட்சியை பலப்படுத்தவும், சீமான் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் துவக்கி உள்ளார்.
சமீப காலமாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களில் பலரும் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். வேறு சிலர், தங்களுக்குள் ஒன்றிணைந்து தமிழ் தேச சிந்தனையை வலுப்படுத்தப் போவதாகக் கூறி, திருச்சியில் மாநாடு நடத்தியுள்ளனர்.
மீதமிருப்போரை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க., மற்றும் த.வெ.க., முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
விலகியோர் தவிர, வேறு பல மாவட்ட நிர்வாகிகளும், சீமான் நடவடிக்கை பிடிக்காமல் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கட்சியை பலப்படுத்தவும், நிர்வாகிகளை சந்தித்து சமாதானம் பேசி, அவர்களை கட்சியில் தக்க வைக்கவும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, நிர்வாகிகளை சந்திக்க, சீமான் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சியில் இருந்து விலகியவர்கள் வகித்த பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்.
நேற்று ராணிப்பேட்டையில் சீமான், தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். அடுத்தடுத்து வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
நா.த.க., என்றால் அது சீமான் மட்டும் தான். அவர் தலைமையில் தான் கட்சி இயங்குகிறது. அதனால், அவரை தவிர கட்சி நிர்வாகிகள் யாருக்கும் கட்சியில் செல்வாக்கு கிடையாது. யார் சென்றாலும், வந்தாலும், கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. அதனால் தான், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும், அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையிலான ஓட்டுகளை கட்சி பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் புதிய கட்சி துவங்கப்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சி மீதான ஈர்ப்பிலும், ஆளும் கட்சி தூண்டுதலாலும், நா.த.க., நிர்வாகிகள் சிலர் விலகிச் சென்று உள்ளனர். பதவி, பணத்திற்கு ஆசைப்பட்டும், இங்கிருந்து சிலர் சென்றுள்ளனர்.
வரும், 2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், தவறிழைத்து விட்டோமே என மனம் திருந்தி, இங்கிருந்து வெளியே செல்வோரெல்லாம் மீண்டும் நா.த.க.,வை நோக்கி திரும்பி வருவர்.
இருந்தபோதும், கட்சியை வலுவாக கட்டமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சீமான், தமிழகம் முழுதும் செல்ல சுற்றுப்பயணம் துவங்கி உள்ளார். அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை சந்தித்து, நிறை, குறைகளை கேட்க உள்ளார். கட்சியில் சோர்ந்திருப்போர் பலருக்கும் பதவி அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.