ADDED : மே 09, 2024 11:34 PM

சென்னை, மே 10- தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. விரும்பிய நகைகளை வாங்க பலரும் நகை கடைகளுக்கு படையெடுப்பர் என்பதால், நகை கடைகள் இன்று நள்ளிரவு வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைக்கு வருவோர் பாதுகாப்பிற்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நகை கடைகள் செய்துள்ளன.
தமிழகத்தில் தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகம். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
எனவே, அன்றைய தினம் சிறிய அளவிலாவது தங்க நகை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது.
சேமிப்பு திட்டம்
இன்று முதல் மூன்று நாட்களுக்கு அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 'தங்கம் வாங்கினால் கிராமுக்கு குறிப்பிட்ட அளவு பணம் குறைப்பு, தங்க நாணயம் இலவசம்' என, பல்வேறு சலுகைகளை நகை கடைகள் அறிவித்து உள்ளன.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 55,000 ரூபாயை தாண்டியது.
பின்னர், தங்கம் விலை சற்று குறைந்தது. நேற்று கிராம் தங்கம், 6,615 ரூபாய்க்கும்; சவரன், 52,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
அட்சய திருதியைக்கு தங்க வாங்க, பலரும் நகை கடைகளில் உள்ள, மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து, மாதம், 1,000, 2,000 ரூபாய் என, தங்களால் முடிந்த தொகையை செலுத்தினர். அவர்கள், தங்களின் சேமிப்பு பணத்தில் விரும்பிய நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்துள்ளனர்.
நேற்றும் ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். இதனால், நகை கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது.
முன்பதிவு
முன்பதிவு செய்த பலரும், அட்சய திருதியை முன்னிட்டு, இன்று முதல் நகைகளை வாங்க, நகை கடைகளுக்கு படையெடுப்பர்; கடைகளில் கூட்டம் அலைமோதும்.
எனவே, இன்று நள்ளிரவு வரை நகை கடைகள் திறந்திருக்கும். நகை வாங்க அதிக அளவில் மக்கள் வருவர் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நகை கடை உரிமையாளர்கள் செய்துஉள்ளனர்.
கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு, 20,000 கிலோ தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு அதை விட விற்பனை அதிகமாக இருக்கும் என, வியாபாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமின்றி, நகை கடைகளுக்கு வந்து செல்ல, பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வெயில் வெப்பத்தில் இருந்து தணிக்க, வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், மோர், பழரசம், குளிர்பானம் வழங்கப்படுகின்றன; சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. இரவில் நகை வாங்குவோர், பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்ல, நகை கடைகளின் சார்பில் வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியைக்காக, பல்வேறு புதிய வடிவங்களில், வித விதமான நகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பலரும் எடை குறைவான நகைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அட்சய திருதியைக்கு தங்கம் விற்பனை, கடந்த ஆண்டை விட, 25 - 30 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயந்திலால் சலானி,தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர், சென்னை.