இயர்போன் பயன்படுத்தினால் காது மந்தமாகும்: அரசு டாக்டர்
இயர்போன் பயன்படுத்தினால் காது மந்தமாகும்: அரசு டாக்டர்
ADDED : பிப் 27, 2025 11:37 PM
சென்னை:'இயர்போன் பயன்படுத்துவோருக்கு, காது கேளாமை ஏற்பட்டால், காதொலி கருவி வாயிலாகக் கூட மீட்க முடியாது' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:
நீண்ட நேரம் 'இயர்போன், ஹெட்போன்' போன்றவை பயன்படுத்திய பிறகு, தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒலி சாதனங்களால் ஏற்படக்கூடிய, காது கேளாமையை தடுப்பதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சாதாரண அளவிலான ஒலியில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் போன்றவற்றின், தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இயர் போனில், 50 டெசிபல் ஒலிக்கு குறைவாக இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். குறைந்த ஒலி, அதிக இரைச்சலை தவிர்க்கக்கூடிய, ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும்.
இயர்போனை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அதிகமாக மொபைல் போன், 'டிவி' பார்ப்பதை குறைக்க வேண்டும். பொது இடங்களில், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு, 100 டெசிபலுக்கு அதிகமாக வைக்கக்கூடாது.
இது போன்றவற்றால், காது கேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காதுகேட்க உதவும் கருவிகள் வாயிலாகக் கூட, கேட்கும் திறனை மீண்டும் பெற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

