ADDED : மே 27, 2024 02:08 AM
ஆண்டிபட்டி : வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப் பகுதியில் இருந்து வரும் மூல வைகை ஆற்றின் நீர், வைகை அணைக்கு சென்று சேராததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது.
கடந்த இரு வாரங்களாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் நீர்வரத்து இன்றி அணையில் இருப்பில் உள்ள நீர் தொடர்ந்து வெளியேறியதால் அணை நீர்மட்டம் கடந்த இரு வாரங்களில் 9 அடி குறைந்துள்ளது.
வைகை அணை நீர்ப்பாசனத்துறையினர் கூறியதாவது:
மே 10ல் வைகை அணை நீர்மட்டம் 56.66 அடியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு 915 மில்லியன் கன அடி, சிவகங்கை பாசனத்திற்கு 376 மில்லியன் கன அடியும், மதுரை பாசனத்திற்கு 209 மில்லியன் கன அடி நீர் கடந்த இரு வாரங்களில் திறந்து விடப்பட்டு உள்ளது.
வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர் வரத்து இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளில் இருந்து மழையால் கிடைக்கும் நீர் வைகை அணைக்கு வருகிறது.
தற்போது அணை நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 229 கனஅடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி-- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வழக்கம்போல் வினாடிக்கு 72 கன அடி நீர் வெளியேறுகிறது.
கேரளாவில் பெய்து வரும் மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றனர்.

