வேகம் எடுக்கிறது வளவனுார் பைபாஸ் மேம்பால பணிகள் கண்டமங்கலம் ரயில்வே பாலம் பணிகளும் சுறுசுறு 4 வழிச்சாலை ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு வருகிறது
வேகம் எடுக்கிறது வளவனுார் பைபாஸ் மேம்பால பணிகள் கண்டமங்கலம் ரயில்வே பாலம் பணிகளும் சுறுசுறு 4 வழிச்சாலை ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு வருகிறது
ADDED : ஜூலை 07, 2024 03:32 AM

விழுப்புரம்: வளவனூர் அருகே, நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் மின்சார டவர் லைன்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பாலப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலையில், விழுப்புரம் - புதுச்சேரி இடையிலான 29 கி.மீ., சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில், வளவனூர் பைபாஸ் சாலை சந்திக்கும் புதிய மேம்பால பகுதியில், புதுச்சேரிக்கு செல்லும் அதி உயர் மின்னழுத்த (400 கேவிஏ) நெய்வேலி மின்சார டவர்கள் குறுக்காக செல்வதால் மேம்பால பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதற்காக, நகாய் அதிகாரிகள், மின்துறையின் பவர் கிரிட் (டவர் லைன்) பிரிவில் அனுமதி பெற்று, நான்கு வழிச்சாலை ஒப்பந்த நிறுவனம் மூலமாக, அங்கு புதிய டவர்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். ஏற்கனவே உள்ள பழைய தாழ்வான டவர்களுக்கு பதிலாக, புதிதாக உயரமான டவர்கள், கெங்கராம்பாளையத்தில் 5, அற்பிசம்பாளையத்தில் 2, வளவனூரில் 3, மல்ராஜன்குப்பத்தில் 2 என 12 டவர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.
முதல்கட்டமாக, 7 புதிய டவர்கள் அமைத்து, கடந்த மார்ச் மாதம் தயாராக வைக்கப்பட்டது. அதில் லைன்களை பிடித்து, புதிய டவர்களில் இணைப்பு வழங்க, மின்துறையின் பவர் கிரீட் பிரிவில் நகாய் அதிகாரிகள் அனுமதி கேட்டனர். லோக்சபா தேர்தல் காரணமாக, மின் துண்டிப்பு செய்து அனுமதி வழங்க பவர் கிரீட் தரப்பில் தாமதப்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 20ல், பவர் கிரீட் நிறுவனம் அனுமதியளித்தது. முதலில் முழு லைன்களையும் மாற்ற தாமதமாகும் என்பதால், தற்காலிகமாக, ஒரு பிரிவு லைன்களை புதிய டவர்கள் மூலமாக மாற்றி, மின் சப்ளை வழங்க ஏற்பாடு செய்தனர். அதன்படி, தற்காலிக டவர்கள் மூலமாக, புதுச்சேரி மின்சார டவர் லைன் இணைப்பு வழங்குதற்கான பணிகள், பவர் கிரீட் அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி நடந்து முடிந்தது.
இதனையடுத்து, தற்காலிக லைன்கள் மூலம் பவர் சப்ளை மாற்றப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் இருந்த பழைய டவர்கள் கழற்றப்பட்டு, உயரமான புதிய டவர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தாழ்வாக சென்ற டவர் லைன்கள் அகற்றப்பட்டுள்ளதால், அங்கு கிடப்பில் இருந்த வளவனூர் பைபாஸ் சந்திப்பு மேம்பால பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது.
அங்கு, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மார்க்கத்தில், மேம்பாலங்களை இணைக்கும் பெரிய சுவர்களுடன் கூடிய இணைப்பு பாலத்துக்கான பணிகள் தற்போது துரிதமாக நடக்கிறது. பாலத்தின் மையத்தில் இடையூறாக உள்ள பழைய டவரை அகற்றும் பணியும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, பவர் கிரீட் அதிகாரிகள் கூறும்போது, 'இந்த வழியாக, புதுச்சேரி செல்லும் 400 கேவிஏ டவர் லைன்கள் புதிதாக மாற்றியமைக்கும் பணிகள் நடக்கிறது. முதலில், தற்காலிகமாக டவர் அமைத்து, புதுச்சேரிக்கான பழைய லைனை மாற்றி சப்ளை வழங்கப்பட்டது.
அதன் பிறகு, உயரமான டவர்கள் மூலம், நிரந்தரமாக, டவர் லைன்களை மாற்றுவதற்கான கட்டுமான பணி நடக்கிறது. பழைய டவர்களை அகற்றி, புதிய டவர்களை அமைக்கும் பணியில் ஒப்பந்த நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி மழை பெய்வதால் தாமதமாகிறது.
வரும் 25ம் தேதிக்குள், புதிய டவர்களுக்கான பணிகளை முடிக்க கூறியுள்ளோம். அவர்கள் முடித்தவுடன் பவர் ஷட் டவுன் செய்து, நிரந்தரமாக புதிய டவர்களில் இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.
நகாய் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, வளவனூர் பைபாஸ் மேம்பாலப்பணி தொடங்கி நடக்கிறது. அதே போல், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணியும் வேகம் எடுத்துள்ளது.
ஒருபுறத்தில் இரும்பு பாலப்பணிகள் முடிக்கப்பட்டு, மறுபுற இரும்பு பாலம் அமைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது. திட்டமிட்டபடி, ஆகஸ்டில் பணிகள் முடித்து, சாலை பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.