ADDED : ஏப் 21, 2024 11:56 PM
வடலுார் : கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில், தமிழக அரசு சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி பிப்., 17ல் துவங்கியது.
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க சன்மார்க்க அன்பர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இம்மையம் கட்டுவதைக் கண்டித்து கடந்த 8ம் தேதி அஸ்திவார பள்ளத்தில் இறங்கி போராடிய பார்வதிபுரம் கிராம மக்களையும், கடந்த 11ம் தேதி போராட்டம் நடத்திய வள்ளலார் பணியகம் - தெய்வத்தமிழ் பேரவையினரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, பார்வதிபுரம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் மற்றும் தொடர் போராட்டம் காரணமாக சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச மைய கட்டுமானப் பணி நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. முதற்கட்டமாக, சர்வதேச மையம் அமைக்கும் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

