மே, ஜூனில் 300 யூனிட் இலவச மின்சாரம் தமிழக அரசிடம் கேட்கிறார் வானதி
மே, ஜூனில் 300 யூனிட் இலவச மின்சாரம் தமிழக அரசிடம் கேட்கிறார் வானதி
ADDED : மே 03, 2024 10:04 PM
கோவை:கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை:
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம், தற்போது மிக அதிகமாக இருக்கிறது. அணைகள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து விட்டது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும். மரங்களை நட்டு வளர்க்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அக்கறை செலுத்துவதில்லை.
தமிழக அரசு தாமதிக்காமல், கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து குடிநீர், மோர் வழங்கினாலும், அது அனைவருக்கும் போதுமானதாக இருப்பதில்லை.
வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, 1 ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை ஆவின் வழங்க வேண்டும்.
அணைகள், ஏரிகள் வறண்டு இருப்பதால், மழை நீரை சேகரிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில், அவற்றை துார்வார வேண்டும்.
கோடை காலத்தில் வழக்கத்தை விட மூன்று, நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, குறைந்தபட்ச மே, ஜூன் இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கிட்டு, மின் கட்டணம் வசூலிப்போம் என்று, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை.
இந்த கோடையில் மட்டுமாவது, ஒரு மாதத்திற்கு மின் பயன்பாட்டை கணக்கிட்டு, மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்று, இது போன்ற நடவடிக்கைகளை, தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.