கரூர் வழியாக வந்தே பாரத் ரயில் காங்., எம்.பி.,க்கு பா.ஜ., பதிலடி
கரூர் வழியாக வந்தே பாரத் ரயில் காங்., எம்.பி.,க்கு பா.ஜ., பதிலடி
ADDED : ஆக 30, 2024 09:41 PM
கரூர்:மதுரையில் இருந்து, கரூர் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு இன்று முதல், 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படுகிறது. அதை, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'கடந்த ஜூன், 17ல் மதுரை - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டத்தின் போது, ரயில்வே துறை சார்பில் வெளியான அறிவிப்பில், வந்தே பாரத் ரயில் கரூரில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு இல்லை. இதுகுறித்து, பத்திரிக்கை, 'டிவி'க்களில் செய்தி வெளியாகி, அது மக்கள் மத்தியில் வேகமாக பரவியது.
இதனால், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே போர்டு சேர்மன் ஜெயாவர்மா சின்ஹா ஆகியோரை சந்தித்து, கரூரில், ரயில் நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனாலேயே, தற்போது கரூரில் ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பு வந்துள்ளது' என, தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாநில பா.ஜ.,- ஓ.பி.சி., அணி துணைத் தலைவரும், கரூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவருமான சிவசாமி வெளியிட்ட அறிக்கை:
மதுரை - பெங்களூரு 'வந்தே பாரத்' ரயில், சோதனை ஓட்டத்தின் போது, கரூரில் நின்று செல்லும் என, ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும், 'வந்தே பாரத்' ரயில் ஐந்து நிமிடம் நின்று தான் சென்றது.
இந்த அறிவிப்பு முதலில் முடிவு செய்யப்பட்டது. அதை தெரிந்து கொள்ளாமல், ஜோதிமணி பேட்டி கொடுத்துள்ளார். அவர் ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு கொடுத்ததால் தான், கரூரில் வந்தே பாரத் ரயில் நிற்கிறது என்ற பொய்யை பரப்ப வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, எந்த ஒரு திட்டத்தையும், தெளிவான முடிவோடு செயல்படுத்தும். இதை ஜோதிமணி புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.