வி.ஏ.ஓ., பதவி உயர்வில் பாரபட்சமான நடவடிக்கை; வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு
வி.ஏ.ஓ., பதவி உயர்வில் பாரபட்சமான நடவடிக்கை; வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 30, 2024 06:30 AM
மதுரை : 'தமிழகம் முழுவதும் உதவியாளராக பதவி உயர்வில் செல்லும் வி.ஏ.ஓ.,க்களுக்கு அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் பொதுவான சட்டவிதிப்படி முதுநிலை நிர்ணயம் செய்வதில்லை. இதற்கு காரணமாக உள்ள வருவாய் நிர்வாக ஆணையத்தின் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியிருப்பதாவது: வி.ஏ.ஓ.,க்கள் முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு பெறும்போது அரசின் அனைத்துத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. 2001 முதல் பணியேற்பு நாளை அடிப்படையாக கொள்ளாமல் விதிகளுக்கு முரணாக பாரபட்சமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதில் அனைத்து மாவட்ட வருவாய் நிர்வாகம், வருவாய் நிர்வாக ஆணையரக அதிகாரிகள் தொடர்ந்து இவ்விதமாக செயல்படுகின்றனர்.
இதனால் வி.ஏ.ஓ.,க்கள் பதவி உயர்விலும், அதனால் பெறும் ஊதியத்திலும் 23 ஆண்டுகளாக பதவி உயர்வு அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசுப் பணியாளர் பணிமுதுநிலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 10.3.2003 முதல் பணிமுதுநிலையை மறுநிர்ணயம் செய்ய வருவாய் உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வி.ஏ.ஓ.,க்களில் பதவி உயர்வு பெற்றோரின் முதுநிலையை மறுநிர்ணயம் செய்யவும், வெளிப்படைத்தன்மையுள்ள முதுநிலை பட்டியலை விரைந்து வெளியிடவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து முதல்வர், அமைச்சர்கள், வருவாய்த்துறை செயலரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.