திருத்தணி காமராஜர் சந்தை பெயர் மாற்ற வாசன் எதிர்ப்பு
திருத்தணி காமராஜர் சந்தை பெயர் மாற்ற வாசன் எதிர்ப்பு
ADDED : மார் 04, 2025 07:08 PM
சென்னை:'திருத்தணியில் உள்ள காமராஜர் காய்கறி சந்தைக்கு, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' எனப் பெயர் சூட்ட முயற்சி செய்வது ஏற்புடையதல்ல' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
காமராஜர் பெயருக்கும், புகழுக்கும், மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக, திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில், காமராஜர் பெயரில், ஒரு காய்கறி சந்தை உள்ளது. இது காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. தற்போது, இந்த சந்தை சீரமைக்கப்பட்டு, திறப்பு விழா நடக்கும் போது, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' எனப் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது; இதை தவிர்க்க வேண்டும்.
காமராஜர் பெயர் கொண்ட சந்தைக்கு, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' என, பெயர் சூட்ட முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. காமராஜர் காய்கறி சந்தை என்பது தொடர வேண்டும். ஏற்கனவே, அங்கு அகற்றப்பட்ட காந்தி சிலையை, சந்தை அருகில் வைக்க வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.