வருவாய் துறையினர் கோரிக்கை நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்
வருவாய் துறையினர் கோரிக்கை நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2025 06:56 PM
சென்னை:'வருவாய் துறையில், உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான, 14, ஆயிரம் பணியாளர்களின் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
சிட்டா அடங்கல், பட்டா, பட்டா மாறுதல், கூட்டுப்பட்டா, பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை முடிக்க, வி.ஏ.ஓ., தாசில்தார், டி.ஆர்.ஓ., கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தேவையான எண்ணிக்கையில், பணியாளர்களோ, அதிகாரிகளோ இல்லை என்ற குறை உள்ளது. பொது மக்களின் வீடு, இடம், நிலம் சம்பந்தமான மனுவை விசாரித்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என்றால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பட்டா, சிட்டா கேட்டு, வருவாய் துறை அலுவலகங்களுக்கு, நடையாய் நடந்து, ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்காமல் காலமானவர்களும் உண்டு.
அவர்களின் வாரிசுகளும் பட்டா கேட்டு அலைகின்றனர். இதற்கு வருவாய் துறை நிர்வாகம், சரியாக இயங்காததுதான் காரணம். தற்போது, வருவாய் துறை அலுவலகங்களில் பணிபுரியும், உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான, 14,000 பணியாளர்கள், அலுவலக நேரத்திற்கு முன்பும், பின்பும், விடுமுறை நாட்களிலும், பணியாற்ற போவதில்லை என, தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். பொது மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் வருவாய் துறையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

