வசந்தகுமார் நினைவு தினம் சத்தியமூர்த்தி பவனில் அனுசரிப்பு
வசந்தகுமார் நினைவு தினம் சத்தியமூர்த்தி பவனில் அனுசரிப்பு
ADDED : ஆக 28, 2024 08:18 PM
சென்னை:மறைந்த தொழில் அதிபரும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின், 4வது ஆண்டு நினைவு தினம், சென்னை சத்தியமூர்த்திபவனில் அனுஷ்டிக்கப்பட்டது.
அங்கு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது படத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மற்றும் இணைந்த கைகள் வசந்தகுமார் நற்பணி மன்றம் சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
வசந்தகுமார் மறைந்தாலும், அவர் செய்துள்ள மக்கள் நலப்பணிகள் மறையவில்லை. எப்போதும் மக்கள் மனதில், காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் நிறைந்து இருக்கிற அளவில் ஒரு மாபெரும் தலைவராக வாழ்ந்து மறைந்துள்ளார். பெருந்தன்மை, சகிப்புதன்மை, பொறுமை, புன்னகை போன்றவற்றை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சின்ன குழந்தைகளிடம் கூட மரியாதையாக பேசுவார்.
யார் மனதும் புண்படாமல் நடக்க கூடியவர். அப்படி தவறு ஏதவாது நடந்து விட்டால் உடனே, அவர்களை சந்தித்து, தன் வருத்தத்தை தெரிவித்து, சமாதானம் செய்வார். யாருக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும், உடனே ஓடி சென்று செய்யக்கூடிய வள்ளலாக திகழ்ந்தார். ஆகையால் தான் அவருடைய பிறந்த நாளையும், நினைவு நாளையும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
அவரது நினைவு நாளில், காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற சபதத்தை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.