வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகளால் தி.மு.க., கூட்டணிக்கு 'வீக்னஸ்' சொல்கிறார் செல்லுார் ராஜூ
வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகளால் தி.மு.க., கூட்டணிக்கு 'வீக்னஸ்' சொல்கிறார் செல்லுார் ராஜூ
ADDED : மார் 03, 2025 05:29 AM
மதுரை : வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகளால் தி.மு.க., கூட்டணியில் 'வீக்னஸ்' ஏற்பட்டுள்ளது; கை, கால் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்க முதல்வர் ஸ்டாலின் போராடுகிறார் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சிறுமியர் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறது. பின் எதற்காக கூட்டணியை நம்ப வேண்டும். கூட்டணி... கூட்டணி... என ஸ்டாலின்தான் சொல்கிறார். கூட்டணியில் உள்ளவர்கள் பெரிதாகக் கூறவில்லை.
வேங்கை வயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் பட்டியல் இனச் சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. கூட்டணியில் திருமாவளவன் 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்' என்ற நிலையில் உள்ளார்.
தி.மு.க., ஆட்சி அமைய காரணமாக இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினரே போராடுகின்றனர். அரசை அப்போது துாக்கிப்பிடித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் தற்போது எதிர்க்கின்றனர். கை, கால் பிடித்து ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார் முதல்வர். தி.மு.க., மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
பெண்கள் மதிக்கக் கூடியதாக அ.தி.மு.க., ஆட்சி இருந்தது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் அவ்வாறு இல்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண்களை வைத்துக்கொண்டே பெண்களைப் பற்றி இழிவாக பேசுகிறார். அவரது பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது.
அமைச்சர் மூர்த்திக்கு சவால்
மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., கோட்டை. இங்கே யார் வந்தாலும் ஒரு பருப்பும் வேகாது. இத்தொகுதிக்கும் மாவட்ட செயலாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண தொண்டரை நிறுத்தினால் கூட இந்த தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறும். மூர்த்தி வந்தார், கல்யாண மண்டபம் கட்டினார் என்பது பெரிதல்ல. மக்களுக்கு என்ன செய்தார். மதுரை மாநகராட்சிக்கு அவரால் அரசிடம் சிறப்பு நிதியை பெற்றுத்தர தர முடியுமா. இவ்வாறு கூறினார்.