பா.ம.க., வன்மத்தை உமிழ்கிறது வி.சி.க., எம்.எல்.ஏ., ஆதங்கம்
பா.ம.க., வன்மத்தை உமிழ்கிறது வி.சி.க., எம்.எல்.ஏ., ஆதங்கம்
ADDED : மார் 01, 2025 04:14 AM
மதுரை : கும்பகோணம் அருகே சமீபத்தில் பா.ம.க.,வினரால் வி.சி.க., கொடிகம்பம் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்த கட்சியின் தலைவர் அன்புமணி, 'இனி வரும் காலங்களில் எந்த கட்சிக்கும் எதிராக இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது' என எச்சரித்தார்.
இதுகுறித்து மதுரையில் நேற்று வி.சி.க., பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒற்றுமையை பெற முழங்கிய பா.ம.க., திசைமாறி தலித்களுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது. வி.சி.க., கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக தனது கட்சியினருக்கு அன்புமணி கூறியது சற்று நம்பிக்கை அளிக்கிறது. என்றாலும் வெளிப்படையாக அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
ராமதாஸ் அவரது தோட்டத்தில் தலைவர்களின் சிலைகளை வைத்துள்ளார். அவை அடையாள அரசியலாக இல்லாமல் அடித்தட்டு மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிற அரசியலாக அமைய வேண்டும் என்றார்.
முன்னதாக சிவகங்கையில் பட்டியலின கல்லுாரி மாணவர் தாக்கப்பட்டத்தை கண்டித்து மதுரையில் நேற்று வி.சி.க., சார்பில் புல்லட் ஊர்வலத்தை சிந்தனைச்செல்வன் துவக்கி வைத்தார். இதில் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.