தலைவாசல் அருகே வாகன தணிக்கையில் ரூ. 3.34 லட்சம் பறிமுதல்
தலைவாசல் அருகே வாகன தணிக்கையில் ரூ. 3.34 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 25, 2024 10:59 PM
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் பகுதியில் வாகன தணிக்கையின்போது, ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற, 3.34 லட்சம் ரூபாயை, தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில், கெங்கவல்லி தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஞானபிரியா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, காரில் வந்த ஆத்துார், முல்லைவாடியைச் சேர்ந்த, தாமோதிரன், 50, என்பவர், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 2 லட்சத்து, 70 ஆயிரத்து, 625 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், தலைவாசல் அருகே, லத்துவாடி கிராமத்தில் உள்ள சோதனைசாவடி பகுதியில், பறக்கும்படை குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வந்த, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த, முகமதுகனி, 40, என்பவரிடம், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற, 63 ஆயிரத்து, 700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தலைவாசல் பகுதியில் இருவேறு இடங்களில், மொத்தம் 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 325 ரூபாயை பறிமுதல் செய்து, கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.

