ADDED : மே 08, 2024 10:39 PM
சென்னை:வேங்கைவயல் கிராமத்தில், நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட மூவரிடம், குரல் மாதிரி பரிசோதனை நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் காலனியில், நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொட்டில் உள்ள நீரின் மாதிரியை எடுத்து, அந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 31 பேருக்கு, டி.என்.ஏ., பரிசோதனை நடந்தது.
சம்பவம் நடந்த போது பகிரப்பட்ட, வாட்ஸாப் உரையாடல் ஆடியோவை கைப்பற்றி, அது யாருடைய குரல்கள் என்பதை உறுதி செய்ய, போலீசார் முடிவு செய்தனர். இதற்கு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர்.
அதன்படி, வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூவரிடம், சென்னையில், டி.ஜி.பி., அலுவலகம் அருகே உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில், நேற்று குரல் மாதிரி பரிசோதனை நடந்தது.
அப்போது, மூவரும் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதி கொடுத்து, வெவ்வேறு முறைகளில் பேச சொல்லியும், குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டன.
அப்போது, கருவி வாயிலாக மூவரின் குரல் அதிர்வின் அளவு மற்றும் ஏற்ற, இறக்கம் குறித்து, தடயவியல் நிபுணர்கள் அளவீடுகளை பதிவு செய்தனர்.
தடயவியல் நிபுணர்கள் கூறுகையில், 'பரிசோதனைக்கு பின், குரல் மாதிரிகள் குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதன் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்' என்றனர்.