படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு 'செக்' 'பெயில்' என அறிவிக்க வாய்மொழி உத்தரவு
படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு 'செக்' 'பெயில்' என அறிவிக்க வாய்மொழி உத்தரவு
ADDED : மார் 09, 2025 02:21 AM
பொள்ளாச்சி: தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் மட்டும், படிப்பில் பின் தங்கிய, நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள், தேர்வில் தோல்வியை தழுவினால், 'பெயில்' என அறிவிக்க, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நடத்தப்படும், கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளி உட்பட 3,000 பள்ளிகளில், ஐந்து, எட்டாம் வகுப்புக்கு, 'ஆல்பாஸ்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் கிடையாது
டில்லி உட்பட, 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில், இந்த இரு வகுப்புகளுக்கான, 'ஆல்பாஸ்' முறையை ரத்து செய்யும், கட்டாய கல்வி உரிமை சட்ட திருத்தம் ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில், 'தமிழக பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
இச்சூழலில், தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் மட்டும், படிப்பில் பின் தங்கிய, நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள், தேர்வில் தோல்வியை தழுவினால், அவர்களில், 10 சதவீதம் பேரை, 'பெயில்' என அறிவிக்க, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
கடந்த, 2009ம் ஆண்டு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல்பாஸ்' திட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமுகமாக, ஒன்பதாம் வகுப்புக்கும் இத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
தொடரும் இடைநிற்றல்
இதனால், படிக்கா விட்டாலும், அடுத்த வகுப்புக்கு முன்னேறி விடலாம் என்ற மனநிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். 10ம் வகுப்புக்கு வந்தவுடன், அவர்களில் பலருக்கு, முறையாக எழுதவும், படிக்கவும் தெரிவதில்லை.
மாறாக, பொதுத்தேர்வில் அவர்களை தேர்ச்சி அடையச் செய்தே ஆக வேண்டும் என, ஆசிரியர்கள் தீவிர பயிற்சி அளிக்கின்றனர். அதனை எதிர்கொள்ள முடியாத மாணவர்கள் சிலர், பாதியிலேயே படிப்பை கைவிடுகின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் தொடர்கிறது.
இதனை தவிர்க்க, ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை, 'பெயில்' என அறிவிக்கவும், அவர்களுக்கு உடனடி மறுதேர்வு நடத்தி, 'பாஸ்' செய்யவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.