ADDED : ஏப் 19, 2024 09:27 PM
சென்னை:ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் ஓட்டை பதிவு செய்தார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார்படுத்தி வருகிறார். அதற்கு முன், இரண்டு படங்களில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதில் ஒன்றான, கோட் படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் ரஷ்யா சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று காலை சென்னை திரும்பிய அவர், நீலாங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்றார்.
அவரது காரை பின்தொடர்ந்து டூவீலர்கள் மற்றும் கார்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர். ஓட்டுச் சாவடியிலும் தொண்டர்கள் கூட்டம் இருந்தது.
இதனால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓட்டுச்சாவடிக்குள் விஜய் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.
போலீசார், விஜயை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டதும், எந்த இடத்தில் எந்த சின்னம் இருக்கிறது என்று தெரியாமல், சிறிது நேரம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, விஜய் பார்த்து கொண்டு நின்றார்; அதன்பின், ஓட்டளித்து வெளியேறினார்.

