த.வெ.க., சார்பில் இப்தார் நோன்பு விஜய் பங்கேற்று தொழுகை
த.வெ.க., சார்பில் இப்தார் நோன்பு விஜய் பங்கேற்று தொழுகை
ADDED : மார் 07, 2025 09:12 PM

சென்னை:தமிழக வெற்றிக்கழகம் சார்பில், முதன்முறையாக நடந்த, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில், முதல் முறையாக, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., அரங்கில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, வெள்ளை நிற வேட்டி, வெள்ளை சட்டை, குல்லா அணிந்து, தனது மினி கேரவேனில், மாலை 5:30 மணிக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பு கிடைத்தவர்கள் மட்டுமின்றி, ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தனது கேரவேனில், 30 நிமிடங்களுக்கு மேல், விஜய் காத்திருந்தார். மாலை 6:00 மணிக்கு பிறகு, விஜய் அரங்கிற்குள் சென்று, இப்தார் நோன்பு திறப்பு சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில், 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுடன் அமர்ந்து, விஜய், நோன்பு கஞ்சி, பேரிச்சம் பழம், மசால் வடை ஆகியவற்றை சுவைத்தார்.
அப்போது வெளியே நின்றிருந்த தொண்டர்கள், அரங்கிற்குள் முண்டியடித்து செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விருந்து நடந்த இடத்தை சுற்றி, விஜய்யின் பவுன்சர்கள் பாதுகாப்பாக நின்றனர். விருந்து முடிந்ததும், சிறிது நேரம் விஜய் நின்றிருந்தார். அவரை மொபைல் போனில் படம் பிடிக்க பலரும் முண்டியடித்தனர்.
அப்போது விஜய் பேசுகையில், ''நபிகள் நாயகம் வாழ்க்கையை பின்பற்றி, மனிதநேயத்தை முஸ்லிம் சொந்தங்கள் கடைபிடிக்கின்றனர். எனது அழைப்பை ஏற்று, இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எனது நன்றி,'' என்றார். மாலை 6:45 மணிக்கு, அங்கிருந்து தனது கேரவேனில் ஏறி, 'பீட்டர்ஸ் சாலை' வழியாக, கை அசைத்தபடியே விஜய் சென்றார்.
அவரை பின்தொடர்ந்து த.வெ.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் ஓடினர். முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், சலசலப்புடன் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும். விஜய் சார்பில் மட்டன் பிரியாணி பார்சலில் வழங்கப்பட்டது.