விஜய்க்கு 'ஒய் பிரிவு' பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
விஜய்க்கு 'ஒய் பிரிவு' பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மார் 14, 2025 09:02 PM
சென்னை:நடிகர் விஜய்க்கு, 'ஒய் பிரிவு' பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக, அவருடன், சி.ஆர்.பி.எப்., மற்றும் ஐ.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில், நடிகரும் த.வெ.க., தலைவருமான விஜய் வீடு உள்ளது. அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், 'ஒய் பிரிவு' பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. விஜய் தரப்பில், இப்பிரிவு பாதுகாப்பை ஏற்பதா, மறுப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனால், மத்திய உளவுத்துறை மற்றும் மாநில போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பை ஏற்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
இந்நிலையில், ஒய் பிரிவு பாதுகாப்பு தொடர்பாக, விஜய் வீட்டில் அவருடன், ஐ.பி., எனப்படும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இரண்டு பேர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையான சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் நான்கு பேர், சென்னை மாநகர போலீஸ் பாதுகாப்பு பிரிவு மற்றும் நீலாங்கரை உதவி கமிஷனர் உள்ளிட்டோர், நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது, ஒய் பிரிவு பாதுகாப்பு வீரர்கள் தங்கும் இடம், விஜய் பயண திட்டம் குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு வீரர்களுக்கு, விஜய் வீடு அருகே தங்கும் இடத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்படை வீரர்கள் விஜய் வீட்டுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.