விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகரில் மறு ஓட்டு எண்ணிக்கை ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
ADDED : ஜூன் 13, 2024 02:02 AM

சென்னை:விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையத்தில், தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், விருதுநகர் தொகுதியில், தே.மு.தி.க., வேட்பாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம், 4,379 ஓட்டு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஓட்டு எண்ணிக்கை முறையாக நடத்தப்படவில்லை என, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் மீது, தே.மு.தி.க., தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி, தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அதன் செயலரிடம், மறு ஓட்டு எண்ணிக்கை கோரி, விஜய பிரபாகரன் நேற்று மனு அளித்துள்ளார்.
அப்போது, விஜய பிரபாகரன் கூறியதாவது:
ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை, 13வது ரவுண்டில் இருந்து, 19 ரவுண்டுக்கு நேரடியாக நடந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் உணவு இடைவேளை நீட்டிக்கப்பட்டது. தபால் ஓட்டுகள் இரவில் எண்ணப்பட்டது. அமைச்சர்களும், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர்.
இதுகுறித்த விபரங்களை எடுத்துக் கூறியுள்ளோம். ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். நீதிமன்றத்தை நாடுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
எங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்திய அதிகாரி ஏற்காதது, மன அழுத்தத்தை தந்துள்ளது. அந்த வலியின் வெளிப்பாடாகவே, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

