சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார் விஜயபிரபாகரன் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்கிறார் பிரேமலதா
சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார் விஜயபிரபாகரன் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்கிறார் பிரேமலதா
ADDED : ஜூன் 06, 2024 07:50 PM
சென்னை:''விஜயபிரபாகரன் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு உள்ளார். எனவே, விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையை விரைந்து நடத்த வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
விருதுநகரில் விஜயபிரபாகரன் தோல்வி அடையவில்லை; தோற்கடிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. விருதுநகரில் மொத்தம் 10 லட்சம் ஓட்டுக்கள் வரை பதிவாகியுள்ளன. இதில், விஜயபிரபாகரனுக்கு 3.80 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூரிடம் 4,379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்ட, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான அறிவிப்புகளில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அங்கு உணவு இடைவேளைக்கு நேரம் ஒதுக்கிய பின்னும், பிற்பகல் 3:00 மணி முதல் 5:00 மணி வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 'எனக்கு பல இடங்களில் இருந்து நிர்பந்தம் வருகிறது; என்னால் சமாளிக்க முடியவில்லை; போனை ஸ்விட்ச் ஆப் செய்யப் போகிறேன்' என தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் வெளிப்படையாக கூறியுள்ளார். அவரை செயல்படவிடாமல் தடுத்த சக்தி எது?
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவர் அறிவித்த நேரத்தில், விருதுநகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. விருதுநகரில் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல்வர் கூறிவிட்டதால், அதை உண்மையாக்க, மூன்று அமைச்சர்கள் சென்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்து, விருதுநகரில் காங்கிரஸ் வெற்றியை அறிவிக்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்போதே தே.மு.தி.க., தரப்பில் கேள்வி எழுப்பபட்டு உள்ளது; பதில் இல்லை. எனவே, விருதுநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கையை விரைந்து நடத்த வேண்டும். முதல்முறை போட்டியிடும் ஒரு இளைஞரை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். விஜயபிரபாகரன் சின்னப் பையன். அவனை பெரிய மனதோடு ஜெயிக்க வைத்திருந்தால், இந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்று இருப்போம். ஆனால், வெற்றி பெறக் கூடாது என அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.