விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தி.மு.க., உள்ளிட்ட கட்சியில் யாருக்கு 'சீட்'
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு தி.மு.க., உள்ளிட்ட கட்சியில் யாருக்கு 'சீட்'
ADDED : ஜூன் 11, 2024 05:27 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தங்களது கட்சியில் வாய்ப்பு கேட்கும் கட்சி பிரமுகர்கள் .யாருக்கு கட்சி தலைமை வாய்ப்பளிக்கும் கட்சியினர் விறுவிறுப்புடன் காத்திருப்பு.
விக்கிரவாண்டி சட்டபை தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி இறந்தார். அதனையொட்டி, இத்தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியான தி.மு.க., சார்பில் விழுப்புரம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, மாநில விவசாய அணி துணை தலைவர் அன்னியூர் சிவா, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., மகன் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
வேட்பாளர் தேர்வில் மாவட்ட அமைச்சர் பொன்முடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவே இறுதியானது கூறியுள்ளதால், கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அ.தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தொரவி சுப்ரமணியன், தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் குமரன் உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டு காத்துக் கொண்டுள்ளனர்.
இவர்களில், முன்னாள் அமைச்சர் சண்முகம் கட்சி தலைமைக்கு யாரை பரிந்துரை செய்கிறாரோ அவருக்குதான் 'சீட்' எனக் கூறப்படுகிறது.
பா.ம.க., சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சிந்தாமணி புகழேந்தி, ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறியதால், இடைத்தேர்தலில் யார் போட்டியிட போகின்றனர் என பா.ம.க., வினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற ராதாமணி, புகழேந்தி ஆகியோர் முழுமையாக பதவியை முடிக்காமல் இறந்து விட்டதால் இரண்டாம் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றது.

