விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பா.ம.க., போட்டியிட விருப்பம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பா.ம.க., போட்டியிட விருப்பம்
ADDED : மே 14, 2024 04:06 AM

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிட விரும்புவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், ஆகஸ்ட், செப்டம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பா.ம.க., போட்டியிட வேண்டும் என, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில், தெருவுக்கு தெரு கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா புகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவல் துறை நினைத்தால், ஒரு வாரத்தில் கஞ்சாவை அழிக்கலாம். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால், நிலத்தடி நீரை நம்பி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து மூன்று மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால், பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என, கர்நாடக காங்கிரஸ் அரசு கூறி வருவதற்கு, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். கர்நாடக அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

