ADDED : ஜூலை 20, 2024 04:28 AM
மயிலம்: மயிலம் அருகே 24 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலம் ஒன்றிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
அவ்வாறு மின்தடை ஏற்பட்ட அவ்வையார்குப்பம், பெரியண்டப்பட்டு கிராமங்களில் நேற்று மாலை வரை மின்சாரம் வரவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டேரிப்பட்டு தீவனுார் சாலையில் அவ்வையார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை 5:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மயிலம் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, விரைவில் மின்சாரம் வழங்குவதாக கூறினர். அதனையேற்று மாலை 5:50 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

