தேர்தல் நடத்தை விதிமீறல்: பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமீறல்: பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : மார் 21, 2024 08:57 PM
பெரம்பலுார்;கடந்த 19ம் தேதி, தி.மு.க., அரசின் சாதனை விளக்கி, தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து ஜக்கம்மா போல் நுாதன முறையில், பெரம்பலுாரில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதை பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார். இதற்கு, போலீசில் முன் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து, துறைமங்கலம் வி.ஏ.ஓ., சுரேஷ் பெரம்பலுார் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரபாகரன் மற்றும் தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகிய இருவர் மீது, இந்திய தண்டணை சட்டம் 143- சட்டவிரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பது, 188- பொது பணியாளரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமை, 286 தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் பெரம்பலுார் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பங்கேற்ற பார்க்கவகுல முன்னேற்ற சங்க செயல்வீரர்கள் கூட்டத்துக்கு அனுமதி பெறாமல் ஏற்படாது செய்து, அதன் மாவட்ட நிர்வாகி அன்புதுரை மற்றும் மண்டப உரிமையாளர் தமிழரசன் ஆகியோர் மீது இரண்டு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

