ADDED : ஏப் 19, 2024 01:21 AM
சென்னை:வி.ஐ.டி., நிகர்நிலை பல்கலையில் பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு இன்று துவங்குகிறது. ஏப்.30 ரிசல்ட் வெளியிடப்பட உள்ளது.
வி.ஐ.டி. நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'வேலுார் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' என்ற வி.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தின் வேலுார், சென்னை, ஆந்திராவின் அமராவதி மற்றும் போபால் வளாகங்களில் பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான கணினி வழி நுழைவுத்தேர்வு இன்று துவங்குகிறது.
இந்தியாவில் 125 நகரங்களிலும், வெளிநாடுகளில் துபாய், மஸ்கட், கத்தார், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும் ஏப்.30 வரை தேர்வு நடக்கிறது.
தேர்வு முடிவு www.vit.ac.in என்ற இணையதளத்தில் ஏப்.30 வெளியிடப்பட்டு, அன்றே மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைமுறை துவங்கும். தரவரிசையில் 1 முதல் 10 வரை எடுப்பவர்களுக்கு பி.டெக் படிப்பு முடியும் 4 ஆண்டுகளும் 100 சதவீத கல்வி கட்டண சலுகை அளிக்கப்படும்.
வி.ஐ.டி.,யின் ஸ்டார்ஸ் திட்டத்தில் தமிழகம், ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் மாவட்ட அளவில் பிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத கல்வி கட்டண சலுகையுடன் உணவு, விடுதி வசதியுடன், இலவச சேர்க்கை வழங்கப்படும். ஜூலை 2ம் வாரத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

