வி.கே.டி., சாலை பணி தொய்வு: ரிலையன்ஸ் ஒப்பந்தம் ரத்து 'நகாய்' அதிரடி முடிவு
வி.கே.டி., சாலை பணி தொய்வு: ரிலையன்ஸ் ஒப்பந்தம் ரத்து 'நகாய்' அதிரடி முடிவு
ADDED : ஜூன் 27, 2024 11:52 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) சாலை பணி மெத்தனமாக மேற்கொண்ட ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து, 'நகாய்' உத்தரவிட்டுள்ளது.
வி.கே.டி., சாலைப்பணியை 165 கி.மீ., துாரத்திற்கு மத்திய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.2586.10 கோடி திட்ட மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இப்பணியை விரைந்து முடிக்க ஏதுவாக, 'நகாய்' எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 3 பிரிவுகளாக டெண்டர் விடப்பட்டது.
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு வரை 66 கி.மீ., பணி ரூ.711 கோடி மதிப்பில் மும்பை ரிலையன்ஸ் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கும், சேத்தியாத்தோப்பு - சோழபுரம், 51 கி.மீ., பணி ரூ.956.23 கோடி, சோழபுரம் - தஞ்சாவூர் 48 கி.மீ., துார சாலை பணி ரூ. 918.87 கோடிக்கு வதேரா படேல் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி துவங்கியது.
இதில் வதேரா படேல் நிறுவனம் பின்னலுார்- சோழபுரம், சோழபுரம் - தஞ்சாவூர் வரை 99 கி.மீ., துாரத்திற்கு 95 சதவீத பணிகள் முடிந்து இறுதிக் கட்டத்தில் உள்ளது.
விக்கிரவாண்டி-பின்னலுார் இடையேயான பணியை டெண்டர் எடுத்த மும்பை ரிலையன்ஸ் நிறுவனம், பணியை நேரடியாக செய்ய போதிய இயந்திரம் மற்றும் ஆள் வசதி இல்லாததால் துணை ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை ஒப்படைத்ததால், பணிகள் முடங்கியது. பலமுறை கால அவகாசம் வழங்கியும் ரிலையன்ஸ் நிறுவனம் பணிகளை முடிக்காமல் காலம் கடத்தியது.
இறுதியாக கடந்த மாதம் நகாய் நிறுவனம் அனுப்பிய நோட்டீசிற்கு, ரிலையன்ஸ் நிறுவனம் அளித்த பதில், திருப்திகரமாக இல்லாததாலும், பணியை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதற்கான கடிதத்தை ரிலையன்ஸ் அலுவலகத்திற்கு நகாய் நிறுவனம் நேற்று முன்தினம் 26ம் தேதி அனுப்பியுள்ளது.
அதில், 15 நாட்களில் பணியிடங்களில் உள்ள உபகரணங்களை அகற்றிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்பிறகு புதிய ஒப்பந்ததாரரை நியமித்து பணிகளை முடிக்க நகாய் திட்டமிட்டுள்ளது.

