ADDED : ஏப் 20, 2024 01:37 AM

நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்: தமிழிசை
தென் சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சாலிகிராமம் காவேரி நகரில் உள்ள பள்ளியில் நேற்று காலை ஓட்டு பதிவு செய்தார்.
பின், அவர் கூறியதாவது :
அனைவரும் ஓட்டு போட வர வேண்டும். இது நம் உரிமை. நம் உரிமையை விட்டுக் கொடுத்தால், நல்லவர்கள் வருவது தடுக்கப்படும். நல்லவர்கள் ஓட்டு போட வேண்டும்; நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.
நம் வாழ்க்கையில், பல அனுபவங்களை மறக்க முடியாது. முதல் முறை ஓட்டு போடும் நபர்களுக்கு, இது மிகப்பெரிய அனுபவம். எந்தவித தயக்கமும் இன்றி ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடுவது நாட்டிற்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
'பட்டுவாடாவை தடுத்திருக்க வேண்டும்'
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, மகன்களுடன் சென்று, சாலிகிராமம் காவேரி நகரில் உள்ள பள்ளியில் நேற்று காலை ஓட்டு பதிவு செய்தார்.
பின், அவர் கூறியதாவது :
முதல் முறையாக விஜயகாந்த் இல்லாமல், நாங்கள் மூன்று பேர் மட்டும் ஓட்டு போட்டு வந்துள்ளோம். இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் அளிப்பர் என்று நம்புகிறோம்.
சில இடங்களில் டோக்கன் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. தேர்தல் ஆணையம் மற்றும் போலீசார் இதை தடுத்திருக்க வேண்டும்.
முதல் முறை வாக்காளர்கள் ஓட்டு போட வர வேண்டும். அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். அவரவர் மனதில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என நினைக்கின்றனரோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
'கலந்தாய்வு வேண்டாம் மனசாட்சி படி ஓட்டு'
மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் வேலன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், நடிகர் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் சென்று நேற்று ஓட்டு செலுத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
ஓட்டு நம் உரிமை; நம் கடமை. முதல் முறை ஓட்டு போடும் அனைவருக்கும் வாழ்த்துகள். வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாய்வு செய்யாமல், உங்கள் மனசாட்சிபடி ஓட்டு போடுங்கள்.
ஆபிரகாம் லிங்கன் கூறியது போல, தோட்டாவை விட வலிமையானது ஓட்டு. ஓட்டு போட ஒரு அரை மணி நேரம் செலவு செய்துவிட்டு, விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பெரிய மாறுதல்
ஏற்படலாம்'
@@
''மக்கள் ஆர்வத்துடன் வந்து தன்னெழுச்சியாக ஓட்டுப்பதிவு செய்வதை பார்க்கும் போது, பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை வருகிறது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடியில், மனைவி கயல்விழியுடன் வந்து ஓட்டளித்த பின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்கூறியதாவது:
மக்கள் ஆர்வத்துடன் தன்னெழுச்சியாக காலையிலேயே வந்து ஓட்டுப்பதிவு செய்வதை பார்க்கும் போது, உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
மக்கள் ஒவ்வொருவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். இது, நம் கடமை என்பதை உணர வேண்டும். அது தான் நாம் வாழும் நாட்டிற்கு ஆற்றும் மகத்தான கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
'தமிழகத்தில் மவுன புரட்சி'
திண்டிவனம், மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் ஓட்டு போட்ட பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் மவுனப் புரட்சியை பார்க்க முடிகிறது. அடுத்த ஐந்தாண்டுகள் நாடு செழிக்க மோடி பிரதமராக வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் பா.ம.க., இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதை, ஓட்டளித்த மக்கள் முகங்களில் பார்க்க முடிந்தது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதுஉறுதியாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதுகடவுளுக்கே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

