வாக்காளர் கையேடு முதல் முறையாக வீடுதோறும் வழங்க நடவடிக்கை
வாக்காளர் கையேடு முதல் முறையாக வீடுதோறும் வழங்க நடவடிக்கை
UPDATED : மார் 22, 2024 12:55 PM
ADDED : மார் 22, 2024 12:55 AM
சென்னை:லோக்சபா தேர்தலில் முதல் முறையாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் கையேடு வழங்க உள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவர். இந்த முறை பூத் சிலிப் வழங்குவது போல, வாக்காளர் கையேடு வழங்க உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
வாக்காளர் கையேடு, எட்டு பக்கங்கள் கொண்டதாக அச்சிடும் பணி நடந்து வருகிறது. முதல் முறையாக வீடு தோறும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சென்று, வாக்காளர் கையேடு வழங்க உள்ளனர். மொத்தம் 2 கோடி வீடுகளுக்கு, வாக்காளர் கையேடு வழங்கப்பட உள்ளது.
இக்கையேட்டில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை; வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிந்து கொள்ளுதல்; ஓட்டுப்பதிவு நாள்; ஓட்டுப்பதிவுக்கு எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்த விளக்கம் இருக்கும்.
தேர்தல் விதி மீறல் குறித்து, 'சி விஜில்' மொபைல் போன் செயலியில் புகார் அளிப்பது எப்படி; ஓட்டளிப்பதற்கான வழிமுறை; தேர்தல் கமிஷனின் பல்வேறு விதமான மொபைல் செயலிகள் குறித்த விளக்கம்; வாக்காளர் உறுதிமொழி போன்றவை இடம் பெற்றுள்ளன.
இதேபோல், 'KYC' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, வாக்காளர்கள் தங்கள் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்; அவர் மீதுள்ள குற்ற வழக்குகள்; அவரது சொத்து விபரம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

