14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் இன்று முதல் 4 நாட்களுக்கு எச்சரிக்கை
14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் இன்று முதல் 4 நாட்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 27, 2024 01:14 AM
சென்னை:இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மாநிலத்தில் அதிகபட்சமாக, சேலம், திருப்பத்துார், ஈரோட்டில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நேற்று பதிவானது.
பாளையங்கோட்டை, 38; கோவை, மதுரை, தஞ்சாவூர், 39; திருச்சி, திருத்தணி, நாமக்கல், வேலுார், 40; தர்மபுரி, கரூர் பரமத்தி, 41 டிகிரி செல்ஷியஸ் என, 13 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே வெப்பநிலை நிலவியது.
கொடைக்கானல், 21; ஊட்டி, 26; வால்பாறை, 31; துாத்துக்குடி, காரைக்கால், 34; சென்னை நுங்கம்பாக்கம், நாகை, புதுச்சேரி, 35; கன்னியாகுமரி, கடலுார், பாம்பன், 36; மீனம்பாக்கம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
இன்று முதல் வரும், 30ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, கடலோரம் அல்லாத தமிழக வடக்கு உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார் என, 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

