கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தவருக்கு எச்சரிக்கை
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்ந்தவருக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 28, 2024 02:26 AM
சென்னை: தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பாதுகாக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'ஒரே மாதிரியாக அடுத்தடுத்து வழக்குகளை தாக்கல் செய்கிறீர்களே ஏன்? இந்த வழக்கில் உண்மை தன்மை இல்லாவிட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில், 44,000 கோவில்கள் வரை உள்ளதால், 44,000 வழக்குகள் தாக்கல் செய்வீர்களா?' என, மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கோவில் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவின்படி, ஆக்கிரமிப்பில் உள்ள எவ்வளவு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்ற விபரம் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
''இருப்பினும், மாவட்ட கலெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுதாரர் கோரியுள்ளார்,'' என்றார்.
இதையடுத்து, 'கலெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பது, ஒரு வகையில், 'பிளாக்மெயில்' முயற்சி. ஒரு வரம்புக்கு உட்பட்டு தான் நீதிமன்றத்தை அணுக வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, மனுதாரரை நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும், 'அரசின் தவறால் தான் இதுபோன்ற வழக்குகள் வருகின்றன' என, அரசு தரப்புக்கு சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு விரிவான அறிக்கையை, அறநிலையத் துறை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.