குறை தீர்ப்பாளர் நியமனம் தாமதம் பல்கலைக்கு எச்சரிக்கை
குறை தீர்ப்பாளர் நியமனம் தாமதம் பல்கலைக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 03, 2024 01:45 AM
சென்னை:நாடு முழுதும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும், மாணவ, மாணவியர் இடையே ஏற்படும் பல்வேறு வகை மோதல்கள், 'ராகிங்' போன்ற பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 'அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், குறைதீர்ப்பாளர் மற்றும் குறைதீர் குழுவை நியமிக்க வேண்டும். அந்த விபரங்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுப்படி, பெரும்பாலான நிறுவனங்கள் குறை தீர்ப்பாளரை நியமித்து விட்ட நிலையில், நாடு முழுதும், 63 நிறுவனங்கள் இன்னும் நியமிக்கவில்லை என்ற, பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.டி.டி.ஆர்., ஆகியவற்றில், இன்னும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை. இந்நிறுவனங்கள் தாமதமின்றி, குறை தீர்ப்பாளரை நியமிக்காவிட்டால், யு.ஜி.சி., விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.