உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் உயர் அதிகாரிகளுக்கு வாரன்ட்
உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் உயர் அதிகாரிகளுக்கு வாரன்ட்
ADDED : ஜூலை 26, 2024 01:25 AM

சென்னை: துாய்மை பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், முன்னாள் உள்துறை செயலர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் ஆணையருக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கொண்டம்மாள். இவர், உள்துறை செயலராக இருந்த அமுதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், மாநகர போலீஸ் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்த அவமதிப்பு மனு:
மாநகர போலீஸ் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில், துாய்மை பணியாளராக பணியாற்றினேன். 2009ல் நான் உள்ளிட்ட 1,149 பணியாளர்களை, அரசு வரன்முறை செய்து ஊதியத்தை நிர்ணயித்தது. ஆனால், எங்களை போன்று சேலம் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றியவர்களுக்கு, கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, 2009ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கும் திருத்திய ஊதியம் வழங்கும்படி வழக்கு தொடர்ந்தேன். அதன்படி, திருத்திய ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் 2013ல் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை, இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து, தனி நீதிபதியின் உத்தரவை 2019ல் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றமும் 2021ல் உறுதி செய்தது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். உத்தரவை அமல்படுத்தாததற்கு, வழக்கில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தான் பொறுப்பு. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவை, ஆகஸ்ட் 27க்குள் அமல்படுத்தவில்லை என்றால், அதிகாரிகள் அமுதா, சங்கர் ஜிவால், சந்தீப்ராய் ரத்தோட்டுக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்க, பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

